
மனிதர்கள் தமக்கென வாழாமல் பொது நலத்திற்கென வாழ்ந்தால்தான் நாடும் வீடும் சிறப்படையும். அதனால் அப்பர் பெருமான் என் கடன் பணி செய்து கிடப்பதே என்றார். சமுதாயம் முன்னேற பொது நலப்பணிகள் மிக மிக அவசியம். பொது நலப் பணிகளில் மாணவர்களின் பங்கு பற்றிச் சிந்திப்போம் .
நமது வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பருவம் மாணவப் பருவம் இப்பருவத்தில் மாணவர்கள் தங்கள் காலத்தை வீணாக்காமல் செய்தற்கரிய செயல்களில் ஈடுபட வேண்டும். இன்றைய இளைஞர் சமுதாயம் பயனற்ற வழிகளில் காலத்தைச் செலவிடுகின்றனர். நடிகர்கள் . நடிகைகள் பெயரில் மன்றங்களை வைத்துக் குறிக்கோள் ஏதுமின்றிச் செயல்படுகின்றனர். இன்று நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் எழுத்தறிவின்றி அறியாமை, மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளனர். புதிய சமுதாயத்திற்கு வழிவகுப்பது மாணவர்களின் கடமையன்றோ கல்வியறிவற்ற மக்களுக்குக் கற்பிக்க முன் வர வேண்டும்.
கிராம மக்களுக்குச் சிக்கன வாழ்க்கை. குடிசைத் தொழில்கள் பற்றிக் கூறி அவர்களுடைய பொருளாதார நிலை உயர வகை செய்யலாம். இது தவிர சுற்றுபுறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதன் இன்றியமையாமையை விளக்கிக் கூறலாம்.
முதியோர்களுக்கு எழுத்தறிவித்தல். கிராமத்தில் வாழும் மக்களுக்கு அரசின் நல்ல திட்டங்களை அறியச் செய்தல், வங்கிகளில் கடனுதவி கிடைக்கச் செய்தல் முதலிய பல்வேறு வழிகளில் மாணவர்கள் தொண்டினைச் செய்யலாம்.
இவ்வாறு மாணவர்கள் பொதுநலப் பணிகளில் ஈடுபட்டால் நாட்டில் அறியாமை நீங்கி வளம் செழிக்கும். தங்களுடைய எதிரகாலம் ஒளிமயமாக விளங்கும். இன்றைய மாணவர்கள் வருங்கால நாட்டை உருவாக்கும் சிற்பிகளாவர். மாணவர்கள் தூண்டுகோலாய் இருந்து நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு உதவுவார்களாக.
இரா. அம்ருதா
10 ‘ஆ’
