கருங்கல்லை எடுத்து
கவின்மிகு சிலையாக்கி
அலங்காரப் பொருளாக்க
அத்துணை ஆசைப்பட்டாய்!
சின்னச் சின்னச் செதுக்கல்களால்
செதுக்கி எனைச்
சிங்காரச் சிலையாக்கிட
மங்காத ஆர்வம் கொண்டாய்!
நான் சிலையாக, நீ சிற்பியானாய்!
புதுப்புது வார்த்தைகளைத்
தெரிந்தெடுத்து வடிவமைத்து
கவியாக எனைப் புனைய
கடுந்தவம் நீ மேற்கொண்டாய்!
நான் கவியாக, நீ கவியானாய்!
வண்ணங்களைக் குழைந்தெடுத்து
ஓவியமாய்த் தீட்டிடவே
ஒருமித்து நீ முயன்று
ஓயாமல் பாடுபட்டாய்!
நான் ஓவியமாய், நீ ஓவியனாய்
மாறித்தான் போனோம்
நீ ஆட்டுவிக்க நான் ஆடி வந்தேன்
நீ பயிற்றுவிக்க நான் பயின்று வந்தேன்
ஒரு புள்ளியிலே மையங்கொண்டு
புவி மொத்தம் சுழல்வதைப் போல்
உன்னையே மையமாய்க் கொண்டு
சுற்றிச் சுற்றி வருகின்றேன்
காணத்தான் நீயில்லை
தேடுகிறேன் நானும்!
அருள்மேரி.
சமூகவியல் ஆசிரியை
என். எஸ். என், நினைவுப்பள்ளி
அட்சயபாத்திரமாய் அன்னம் இட்டாய்
ஆராதனை செய்யக் கற்றுத் தந்தாய்
இனிமையாய்ப் பழக எடுத்துரைத்தாய்
ஈகைத்திறனை எங்கும் விதைத்தாய்
உறவுகளை நேசித்திட சொல்லித் தந்தாய்
ஊக்கமுடன் செயல்பட ஊன்றுகோலானாய்
எண்ணம் உயர்ந்திட சிந்தித்தாய்
ஏணியாய் இருந்து வளர்த்து விட்டாய்
ஐயமின்றிக் கற்றிட உதவி செய்தாய்
ஒன்றென என்னுள் கலந்திட்டாய்
ஓங்காரமாய் எங்கும் நிறைந்திட்டாய்
ஒளவியமின்றி வாழ்கின்ற தாய்
ந. பத்மப்பிரியா
தமிழாசிரியை
என்.எஸ்.என். நினைவுப் பள்ளி