
உலகின் கடைசி நாள்
உலகின் கடைசி நாள் எதுவென்று தெரிந்துகொண்டு வங்கியிலிருந்து கடன் வாங்கி இராக்கெட் இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் சென்று உலகின் கடைசி நாள் முடிந்தபின் மீண்டும் உலகத்திற்கு வருவேன். ஒரு இராக்கெட்டில் நமக்குத் தேவையான அளவு உயிர் மூச்சு இருக்கும் .அதைத்தவிர உயிர்மூச்சு உள்ள சிலிண்டர்களை அதிகமாக எடுத்துச் செல்வேன் . நான் செல்லும் முன் என் தாய் தந்தை என் நண்பர்கள், அவர்களின் பெற்றோர் அனைவரையும் அழைத்துக்கொண்டு அனைவரும் அந்த நாள் முடியும் வரை இருந்துவிட்டு பின் திரும்புவோம்.
ஜி. குரு வெங்கட்ராகவன் IX -A
கடைசிநாள் என்றாலே சந்தோஷம் மகிழ்ச்சி பள்ளியின் கடைசிநாள் போல உலகின் கடைசிநாள் என்று ஒன்று வந்தால் என்னால் முடிந்தவரை நான் மகிழ்ச்சியாக இருப்பேன். என்னுடன் இருப்போரையும் மகிழ்விப்பேன். நாம் இறந்தால் ஒன்றும் எடுத்துப் போவதில்லை அதனால் கிடைக்கின்றதை அனுபவிக்க வேண்டும்.
செ.சஞ்சய் குமார் IX–C
உலகின் கடைசி நாள் அன்று நான் என் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பேன். அந்நாளில் என் குடும்பத்தினரோடு இருப்பேன். சுற்றுலாப் பயணம் மேற்கொள்வேன். என் நண்பர்களோடு சில நேரம் பேசி விளையாடுவேன். தெருவில் இருக்கும் மக்களோடு பேசுவேன். உலகின் கடைசி நாள் என்பதால் அன்று நான் தீபாவளியே கொண்டாடுவேன். இனிப்புகளை வாங்கி பங்கு போட்டுக் கொண்டு உண்டு மகிழ்வேன். பாரதியார் மற்றும் பாரதிதாசனின் கவிதைகளைப் படிப்பேன். என் கடைசி ஆசையாக உலகில் உள்ள ஏதேனும் ஒரு அதிசயத்தைக் கண்டு மகிழ்வேன். நீச்சல் குளம் சென்று வருவேன். நகரத்தைச் சுற்றிப் பார்ப்பேன். சில புராணக் கதைகளில் கூறுவது போல உலகின் கடைசி நாள் கடைசி நிமிடத்தன்று இறைவனிடம் சரணடைவேன்.
ஸ்ருஜனா IX–C
நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களைக் கொண்டு நமக்கு அடைக்கலமளிக்கும் இவ்வுலகத்திற்கு உறுதியாக அழிவு உண்டு. இந்த உலகின் கடைசி நாள் இவ்வுலகில் வாழும் உயிரினங்களின் கடைசிநாளைக் குறிப்பிடுகிறது. அந்நாளன்று மனித இனம் இணக்கமாக இருக்கும். அன்றைய தினம் தம் பாவங்களைக் கரைக்கும் தினமாகும். மனதைத் தூய்மையாக வைத்து மற்றவர்களிடத்தில் அன்பும் இறைவனிடத்தில் பக்தியும் கொண்டு முக்தியை அடையும் நாளாகும். இந்த நிலையில் நான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பேன். மற்றவர்களை கடிந்து கொள்ளாமல் அனைவரிடமும் அன்பு பாராட்டி அச்சமின்றி என் அனைத்து முடிவுகளையும் எண்ணங்களையும் உரைப்பேன். அன்றாவது மக்கள் அனைவரும் நலமோடும் இன்பத்துடனும் வாழ வழிவகை செய்வேன். இதுவரை நாம் அனுபவிக்கும் எந்த சுகத்தையும் கண்டிராத ஏழை எளிய மக்களுக்கு அனைத்து சொத்துகளையும் கொடுத்து அவர்கள் அன்றாவது நிம்மதியாக வாழ வழிவகை செய்வேன். எனது குடும்பத்தினருடனும் தோழிகளுடன் இவ்வுலகம் முழுவதையும் சுற்றுவேன். மேலும் எனக்குள்ள ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்வேன். என் கற்பனைகளை கவிதையாக வடித்து இன்புறுவேன். மேலும் மற்றவர்களிடத்தில் பேரும் புகழும் பெறுமாறு வாழ்வேன். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வேன். அன்றாவது பணம் என்னும் மோகத்தை விடுத்து அனைவரும் மனதின் வழி நடக்க அறிவுரை கூறுவேன். இவ்வாறு அனைவரையும் மகிழ்ச்சியாக வைப்பதுடன் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
பு.வி.இராகவி IX – C
உலகின் கடைசிநாளன்று நான் எனக்கு பிடித்த ஆசைகளை நிறைவு செய்வேன். முதலில் நான் விளையாடுவேன். பின்பு நண்பர்களோடு பேசுவேன். பிறகு கைபேசியில் விளையாடுவேன். பிறகு உணவகளுக்குச் சென்று எனக்கு பிடித்த உணவை உண்பேன். பின்பு ஏழு அதிசயங்களுக்குச் செல்வேன். நான் பிறகு கீபோர்ட் வாசிப்பேன். கடற்கரை ஓரங்களில் சென்று விளையாடுவேன்.
கவியரசு. சா IX – C
உலகம் அழியும் முன் நான் அழிய ஆசை. ஆனால் விதியின் விருப்பமோ வேறு. இதை உணரும்போது நான் புவியின் இறுதி நாளில் இருப்பதை அறிந்தேன். நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு முன்பே பிறந்த பூமி நான் தோன்றி நூறு ஆண்டுகளும் தங்காததை நினைத்து சோகமுற்றேன். ஆனால் என் பிற தலைமுறைகள் தப்பித்ததை ஓர் இன்பம் தரும் விஷயமாகக் கருதி நிறைவுடன். இவ்வுலகிலே தோன்றி அத்துடனே அழியும் வரம் கிடைப்பது. அரிது என்பதையும் உணர்ந்து சிறியதோர் புன்னகையுடன் அந்த மாபெரும், இயற்கையின் அழிவிற்குத் தயாரானேன், மீண்டும் ஓர் பிறவி [ஜென்மம்] எடுத்தால் இப்புவியில் இதே இடத்தில் இதே உறவுகளுடன் பிறக்க வேண்டும் என்னும் பிரார்த்தனையுடன்.
கோ. ரேஷ்மிகா IX – C
தொலைக்காட்சிச் செய்தி ஒன்று
காலை 4.00 மணி. உலகின் கடைசிநாள் இதன் காரணமாக 10ரூபாய் பொருள்கள் 2 ரூபாய். 100 ரூபாய் பொருள்கள் அனைத்துக் கடைகளிலும் 99% தள்ளுபடி. சில கடைகளில் ரூபாய்க்கு 10 மடங்கு அதிகமாக விலை என விற்கப்படும். இது ஒரு நற்செய்தியான தீய செய்தி. உலகில் உள்ள அனைத்துக் கடைகளும் முடப்படும். இனி சாப்பாடு கிடையாது. மகிழ்ச்சி கிடையாது. உலகில் உள்ள அனைத்து விளையாட்டுப் பூங்காக்களிலும் கூட்டம் குவியும்.
கார்த்திக் IX – C
உலகம் என்பது தெய்வத்தினால் உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய இவ்வுலகத்தை மனிதர்களால் உருவாக்க முடியாது. ஆனால், மனிதர்கள் இப்புவியை அழித்து வருகிறார்கள், இப்புவி மிகவும் பாழடைந்து, அழிந்து வருகின்றது. இவ்வாறு இந்த நிலை தொடர்ந்தால் நாம் அனைவரும் இவ்வுலகில் வாழும் நமது நாட்களை எண்ண நேரிடும். உலகில் கடைசிநாளாக இன்று இருந்தால், அனைவரும் வருத்தத்துடன் அழுது கொண்டே இருப்பர். ஆனால் நான் அவ்வாறு செய்யாமல் சுற்றுலா சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்வேன். ஏனென்றால் இப்புவியில் வாழும் கடைசி நாளாவது மகிழ்ச்சியாக வாழலாம். நான் அனைவரிடத்தும் ஏதாவது இயற்கை வளம் நிறைந்த இடத்திற்குச் சென்று மனம் குளிரப் பார்க்கச் சொல்வேன்.
சுபவதனா. ச. மோ IX – A