காதோரம் கதை கூறிடும்
தென்றலை நேசி
உலகை உய்வித்து ஒளிர்ந்திடும்
வெய்யோனை நேசி
தேய்ந்தாலும் வானில் சுழன்று
கவியாய் உலவிடும் நிலவை நேசி
வடிவமது மாறினாலும் கடிதே சென்றிடும்
கொண்டலை நேசி
எட்டிப்பிடிக்கும் தூரமே வாவென நவின்றிடும்
விண்ணை நேசி
கால்தொட்டு முத்தமிடும்
கடலலையை நேசி
என்னோடு ஆடவா வென்றழைக்கும்
மழையை நேசி
வாழ்க்கையில் வளைந்து கொடு
என்றுரைத்திடும் நாணலை நேசி
கடும்புயலதுவே அசைத்தாலும்
திண்மையாய் நின்றிடும் மரமதனை நேசி
வளம் பல வேரறுத்தாலும் பொறையுடன்
தாங்கும் அன்னை பூமியை நேசி
கள்ளமில்லாசிரிப் பொழுகும்
மழலையை நேசி
வஞ்சமில்லா உள்ளம் கொண்ட
கவலையில்லா மாணவனை நேசி
பைந்தமிழ்ச் சொல்லால் இனிமை
கூட்டிடும் தமிழை நேசி
பகையென்றாலும் இன்முகம் காட்டிவர வேற்றிடு
என்றிடும் பண்பையுணர்த்திடும் தமிழன் மரபை நேசி
தொலைதூரத்திலிருந்தாலும் நட்பு பாராட்டும்
நண்பனை நேசி
வலி தரும் உறவென்றாலும்
கசப்புடனாவது நேசி
நன்றியதனையேயுணர்த்திடும்
நல்விலங்கெதுவானாலும் நேசி
கருணை மனம் கொண்ட அகம்
எதுவெனினும் நேசி
இமைகளும் சுமையடி என உள்ளமது
உரைத்தாலும் வாழ்ந்து பார்க்கலாமென
அரவணைக்கும் வாழ்வை நேசி
நீர்க்குமிழி வாழ்வதனில்சரித்திரம்
படைத்திட உன்னை நேசி
நினைக்காவிடினும் நிழலாயுடன்வருவேன்
என்றுதொடர்ந்திடும் இறைவனை நேசி–இதுவரைச்
செவிமடுத்ததில் ஏதேனுமொன்றைச்
செயலாற்றிட சற்றே நீ யோசி
த.செல்வராணி
தமிழாசிரியை
என்.எஸ்.என். நினைவுமேல்நிலைப்பள்ளி