காகித ஓடம்
குளிர்ந்த மழைக்காலம் செழிப்பைக் கொண்டு வந்தாலும் குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி விடுகின்றது. அப்போது, குழந்தைகளுக்கு பொழுதுபோக்காக அமைவது தேங்கியிருக்கும் நீரில் காகிதக் கப்பல் செய்து அதை மிதக்க விட்டு இரசிப்பதாகும். நானும் மழைக்காலத்தில் எனது அக்காவுடன் காகிதக் கப்பல்கள் செய்து போட்டிபோட்டுக் கொண்டு யாருடைய கப்பல் முதலில் போகிறது என்று பார்ப்போம். அதனைச் செய்யும் போது அத்தனை ஆனந்தம் பெரியவர்கள் கூட அத்தருணத்தில் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள். அதை ஓடும் நீரில் மிதக்க விட்டு அது துள்ளிச் செல்லும் போது அதை இரசித்து மகிழ்வது தான் ஆனந்தம். இந்தக் காகித ஓடம் எனக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது ஒரு கப்பல் செல்லும் போது அதனைச் சுற்றியிருக்கும் நீர் அதனை பாதிப்பதில்லை ஆனால் கப்பலுக்குள் வரும் சிறிதளவு நீர் அக்கப்பலை மூழ்கடிக்கின்றது. அதுபோலப் தான் நம் மனதும் நம்மைச் சுற்றியிருக்கும் கவலைகள் நம்மை பாதிப்பதில்லை. அதை நாம் மனதில் கொள்ளும் போது தான் நாம் மன அழுத்தம் பெறுகிறோம். இதனைப் புரிந்து கொண்டவன் வாழ்வில் வெற்றி பெறுவான்.
கோ.பூர்ணிமா VIII – A
காகித ஓடங்களை வைத்து விளையாடிய நாட்கள் தங்கம் போன்றது. ஒரு முறை நான் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என் தோழி காகிதத்தை அப்படியும் இப்படியும் மடித்து காகிதஓடம் செய்யக் கற்றுக்கொடுத்தாள். மழை காரணமாக விடுமுறை வரும் போது நீர் தேங்கியிருக்கும் அதில் சிறு சிறு ஓடங்களைச் செய்து விளையாடுவோம். சில போட்டியும் வைத்துக் கொள்வோம் அதில் யார் செய்த ஓடம் அழகாக இருக்கிறது என இரசிப்போம். இன்னும் சில தோழிகளோடு சேர்ந்து சின்ன ஓடம், பெரிய ஓடம், சாதாரண ஓடம், கத்தி ஓடம், ராஜா ராணி ஓடம் என வித விதமான காகித ஓடங்களைச் செய்து விளையாடுவோம் காகித ஓடம் காற்றின் வேகத்திற்கேற்ப காற்றடிக்கும் திசைக்கேற்ப, ஆடி ஆடி நீரில் செல்லும். அதுவே, ஒரு அழகு. நீரோட்டத்திற்கு காகித ஓடம் செல்லும் வழியில் நாங்களும் கரை ஓரமாக ஓடுவோம். மழை பெய்து காகித ஓடத்தில் நீர் விழுந்தால், அவ்வளவுதான் அது, அப்படியே நீரில் மூழ்கி விடும், அது ஒரு கனாக் காலம். திரும்பவும் அந்த நாள் வருமா என என் மனம் ஏங்குகிறது.
சி.ஹரிணி VIII B