
உன் மழைக்கால அனுபவம்…
மழை என்பது எனக்கு மட்டுமல்லாமல் என் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடிக்கும். மொட்டை மாடியிலும், தெருவிலும் என் குடும்பத்தினருடன் நனைவதும், அலைவதும் மட்டுமல்லாமல் தெருவோரத்தில் ஒதுங்கியிருக்கும் நாய், மாடு மற்றும் ஆடுகளுக்கும் ஆகாரங்கள் அளிப்பதுமான மழையை எனக்கு மிகவும் பிடிக்கும் மழையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த அளவு நிதி உதவியும், மற்ற உதவிகளும் செய்தேன். மழையின் போது நாம் வெளியில் சுற்றுவதன் மூலமே ஆண்டவன் கொடுத்த வரமாகிய மழையை இரசிப்பேன்.
ஹ .சாய் வர்ஷா IX- இ
என் மழைக்கால அணுபவமானது சுகமான, அனுபத்தையே நினைவிற்குக் கொண்டு வரும்.
மேகமோ கருகருக்க;
சாலையில் ஓடும் நீரோ
மழைத்துளி கீழே விழும் நேரம்
சிப்பிகளில் முத்து விளைவிக்கும்
செடி கொடிகள் ஆடிக் குலுங்க,
பட்சிகள் பாடி மகிழ,
பூக்களோ பாடத்தொடங்க,
மக்களோ நின்று இரசிக்க,
காடுகளில் சிற்றாறுகள் சீறிப்பாய
என்னுள்ளும் மகிழ்ச்சியானது
கரை புரண் டோடியது.
இவையெல்லாம் கலந்த மழையை ஒருசேரக் காண்பதே மகிழ்வான அனுபவம் தான்.
சீதாலஷ்மி IX –B
எனக்கு ஐந்து வயதான போது ஒரு நாள் மழையை இரசித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் ஒரு பெரிய கிணறு இருந்தது. மழை பொழிகையில் கிணற்றிற்கு அருகில் இருந்த மேடையில் இருந்து பூனை ஒன்று எப்படியோ கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றில் மனிதர்கள் இறங்க ஒரு பாதை இருந்தது. அந்த இடம் ஈரமாக இருந்ததால் பூனை வழுக்கி விழுந்தது. பூனை கத்தும் சத்தம் கேட்டு நான் அங்கு சென்று பார்த்தேன். வாளியில் அமரும் என்று நினைத்து, ஒரு வாளியை அதனுள் விட்டேன். ஆனால் அந்த பூனை பயந்துவிட்டது. நானும், என் அம்மாவும் கிணற்றைச் சுற்றி நின்று கொண்டிருந்தோம். என் பாட்டி ஒரு கிண்ணத்தில் பால் வைத்து அதனை வாளியில் வைத்து பூனையின் அருகே வாளியை வைத்தார்., பூனை வாளியைப் பார்த்து மெதுவாக வாளியில் குதித்தது. பூனை பாலை பருகும் போது , நாங்கள் மெதுவாக வாளியை மேலே தூக்கினோம். பூனையைக் காப்பாற்றினோம்.நானும் மழையில் நன்கு நனைந்தேன்.
வே. நித்யஸ்ரீவனமாலிகா IX -B
கடந்த ஆண்டு வந்த பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். ஆனால் எனக்கு இந்த மழை ஒரு நல்ல அனுபவமாகத் திகழ்ந்தது அப்போது தான் எங்கள் வீட்டில் அனைவரும் கூடி அமர்ந்திருந்தோம். மழைக்காலத்தில் ஆவி பறக்கும் உணவுகளை உண்பதே மனதிற்கு புத்துணர்ச்சியை அளித்தது.எனது பாட்டி எனக்கு இந்த மழைக்காலத்தில் அவரது பழைய ஞாபகங்களை என்னுடன் பகிர்ந்தார். அனைத்து உறவினர்களிடமும் நலம் விசாரித்தோம். அப்போது தான் முதல் முறையாக நாங்கள் அனைவரும் உறவினர்களிடம் வெகுநேரம் தொடர்பு கொண்டோம்.
அதனால் எனக்கு இந்த மழைக்காலம் அனைவரையும் இணைக்கும் தொலைபேசியாகத் தெரிந்தது.
தி.நிதிஷ் IX -B
எனக்கு மழைக்காலம் மிகவும் பிடிக்கும். ஆனால் என் அம்மா என்னையும் என் தங்கையையும் விளையாட விடமாட்டார். ஒரு நாள் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. நானும் என் தங்கையும் மழையில் விளையாட அனுமதி கேட்டோம். என் அம்மாவும் என்னை அனுமதித்தார். நானும் என் தங்கையும் மழையில் துள்ளிக் குதித்து விளையாடினோம். ஒருமணி நேரமாயிற்று. என் அம்மா எங்களை உள்ளே அழைத்துச் சென்று திட்டினார் .நானும் என் தங்கையும் மன்னிப்புக் கேட்டோம். அதன் பின்பு ஜன்னல் அருகே அமர்ந்து மழை குறையும் வரை மழை இரசித்தோம்..இதுவே என் வாழ்நாளில் மறக்க முடியாத மழைக்கால அனுபவம். ஏனென்றால் நான் அதன் பின்பு மழையில் விளையாடவே இல்லை. கடவுளிடம் அவ்வாய்ப்பு மீண்டும் கிடைக்குமாறு வேண்டுகிறேன்.
ஜெ. சாய் ஜனனி IX – B
மழை என்றாலே குழந்தைகளைக் கவரும் ஓர் அனுபவம். அதனைக் கூற வார்த்தைகளே இல்லை.
கனமழை பொழிந்தாலே குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு செயல் நடக்கும். மற்றவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அது மிகவும் பிடிக்கும். அதுதான் பள்ளிகள் விடுமுறை என்பது கனமழை பொழிந்தால் அக்காலை வேளையிலேயே தொலைக்காட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை இருக்கிறதா? என்று தான் முதலில் பார்ப்பேன்.
மழைக்காலத்தில் என் தாய் சுடச்சுட செய்து கொடுக்கும் உணவு. அவ்வுணவு மழைக்காலத்தில் மட்டுமே தனிச் சுவையைத்தரும். தந்தை தொழிலுக்குச் செல்ல மாட்டார். அவரோடு விளையாடுவது மகிழ்ச்சியைத்தரும்.
வருடத்தில் ஒரு முறை வரும் மழையே அடுத்தமுறை எப்பொழுது வரும் என்ற ஆசையைக் கொண்டு வரும். இந்த அனுபவத்தை என்றும், எப்பொழுதும், எந்நேரத்திலும் என்னால் மறக்க இயலாது. காலம் கடந்தாலும் இந்த அனுபவம் என் மனதில் என்றும் நிற்கும்.
வி.காவ்யா IX-C
மழை வந்தாலே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி வீட்டிற்கு வெளியில் தண்ணீர் நிற்கும். அதில் கப்பல் விட்டு மகிழ்வேன். மழைக்காலத்தில் நான் சூடாகச் சாப்பிட விரும்புவேன். அந்த மழையின் சத்தத்துடன் சமைக்கும் வாசனை வந்துகொண்டே இருக்கும். அதனையெல்லாம் நினைத்துக் கொண்டே சாலையில் தேங்கி இருக்கும். தண்ணீரில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும்.
சே. கிருஷ்ணகுமார். IX-C
மழைக்காலத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். சில்லென்ற குளிர்ந்த காற்று! சொட்,சொட்,என்று விழும் மழைத்துளியின் சத்தம் ஆகியவற்றை எல்லாம் நான் இரசிப்பேன்.சூடான, சுவையான உணவுகளை உண்ணும் போது வரும் இதமான இந்த உணர்வை நான் அனுபவிப்பேன். அடைமழை பொழியும் பொழுது பெருக்கெடுத்து ஓடி வரும் மழைநீரில் கப்பல் விட்டு விளையாடுவேன். மழை நீரில் நண்பர்களோடு கால் பந்து விளையாடும் அனுபவமே சுவாரசியமானது. அதிக மழையால், பள்ளிவிடுமுறை எனக்கேட்கும் பொழுதே உலகில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் இன்பம் போல் எனக்கும் மிகவும் இன்பமாக இருக்கும்.
S. கிஷோர் குமார் IX-C
சென்ற ஆண்டு பெய்த மழையை என்னால் மறக்க முடியாது. அப்போது நான் எனது தாத்தா வீட்டில் இருந்தேன். மழைநீர் எங்களது வீட்டைச்சூழ்ந்தது. தண்ணீரின் அளவு வீட்டின் படிவரை உயர்ந்தது. அப்போது எனது தாத்தா என்னை என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு தண்ணீர் தாத்தா வீட்டைச்சூழ்ந்தது. தண்ணீர் பாட்டியின் தலை உயரம் வரை உயர்ந்தது. எனது பாட்டிக்கு நீச்சல் தெரியாது. தாத்தா பாட்டியை மாடிக்கு அழைத்துச்சென்றார். தண்ணீரில் பாம்பு ஓடியது. நான் எனது வீட்டிலிருந்து தாத்தாவைத் தொடர்புகொள்ள முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை. தாத்தாவின் கைப்பேசி மூலம் தாத்தாவுடன் தொடர்பு கொண்டேன். என்னிடம் தாத்தா பயப்படாதே! எனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார். அதன்பின் தண்ணீரின் அளவு மாடிப்படிவரை உயர்ந்தது. எனக்கோ இங்கு தூக்கம் வரவில்லை. எனது பெற்றோர் கவலையுடன் இருந்தார்கள். ஆனால் நான் கவலை இல்லாமல் தூங்கினேன். தூங்குவதற்கு முன்பு நல்லதே நினையுங்கள் என என் பெற்றோரிடம் கூறினேன். தூங்கும் போது தாத்தா பாட்டியைக் கண்ட மாதிரி கனவு கண்டேன். நான் விழித்தபோது நேரில் வந்த எனது தாத்தா, பாட்டியைக் கண்டேன். நான் ஆனந்தத்தில் பறந்தேன். எனது இந்த மழைக்கால அனுபவத்தை மறக்க முடியாது.
மு.சுப்ரமணியன் IX-C
சென்ற வருடம் பெய்த அடைமழையால் மிகப்பெரிய வெள்ளம் சென்னையில் பல வீடுகள், கடைகள், பொருட்கள் மற்றும் பல இடங்களில் புகுந்து மக்களை தொல்லையில் சிக்க வைத்தது. இவ்வாறு மழை பெய்தமையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதுதான் பள்ளி மாணவர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. (அதாவது என்னையும் சேர்த்துதான்). பள்ளி இல்லாவிட்டாலும் படிக்கலாமே என்று எனக்குத்தோணவில்லை. இயற்கையை இரசிப்பதில் மிகவும் ஆர்வம்உண்டு. அதனால் பெய்யும் கன மழையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். பெய்யும் மழையில் அடுத்த தெருவில் உள்ள என் தோழியின் வீட்டிற்குக் குடைபிடித்துச் சென்று அவளையும் இங்கு விளையாட அழைத்தேன். காகிதக் கப்பல்கள் செய்து மழை நீரில் போர் நடத்தினோம் இடையில் வரும் பசியைத் தீர்த்துவிட்டு, அமைதியாக இருக்கும் எங்கள் சுற்றுப்புறத்தை மிகவும் சுத்தமாக மாற்றிவிட்டோம். பின்னர் செய்தியில் ஒரு 35 வயதான ஒருவர் அத்தெருவிலுள்ள மழை நீரில் விழுந்து உயிரிழந்தார் என செய்தி கேட்டேன். மிதிவண்டியுடன் நடந்து என் தங்கையையும் அழைத்து அந்த இடத்திற்குச் சென்றேன். உள்ளே செல்லச் செல்ல ஆழமும் அதிகமாயிற்று. துணியெல்லாம் வீணானது. எனக்கு பயம் மிகவும் அதிகமாக, அந்தத் தெருவிலிருந்து 7;00 மணி அளவில் வெளியே வந்தேன். இது ஆரம்பம் மட்டுமே 1 மாதத்திற்குப் பிறகு எங்கள் வீட்டை விட்டே சாலையில் இறங்க முடியாத அளவிற்கு தண்ணீர் நிரம்பியது. நாளுக்கு நாள் மக்களின் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பின்னர் என் அப்பாவுடன் சென்று மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் பல பொருட்களை வழங்கினேன். இன்றும் இந்த மழைக்கால அனுபவம் என்னால் மறக்க முடியாத அளவிற்கு என் நினைவில் நிற்கிறது.
ஸ்ரீ சுப்ரசா IX-C
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னைப் பட்டணத்தில் பெய்த மழை சென்னையை புரட்டிப் போட்டது. நான் வசிக்கும் சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிந்து என் பகுதியில் முக்கியமான எம்.எம்.டி.ஏ நகரில் அதிக இழப்பு ஏற்பட்டது. இதில் என் வீட்டில் தண்ணீர் புகுந்து எங்களால் நடக்கக் கூட முடியாத படி முட்டியளவு நீர் தேங்கியதால் சிரமத்துக்கு ஆளாகினோம். வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாயின இதைப்போல் அனுபவம் மீண்டும் வரக்கூடாது என இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அரவிந் IX–A
அன்றொரு நாள் பெய்த மழையினால் மிகவும் அவதிப்பட்டோம். பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை இருந்தது. அதுவும் எங்கள் தெருவில் வெள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவ்வெள்ளம் ஒரு ஆளையே வீழ்த்தும் அளவில் இருந்தது. அதில் ஒருவரை வெள்ளம் அடித்துச் சென்றது. மழை நீர் நாளுக்கு நாள் மிகவும் பெருக்கெடுத்து ஓடியது. மூன்று நாள் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. பால், காய்கறிகளுக்கு மிகவும் தட்டுபாடு ஏற்பட்டது. இத்தகைய வெள்ளம் ஏற்பட நாமும் ஒரு காரணமாக இருப்பதனைக்கண்டு மிகவும் மனம் வருந்தினேன்.
அ. சினேகா IX–A
மழைக்காலத்தில் நான் சொட்ட சொட்ட நனைந்து போன நினைவுகள் சில. மகிழ்ச்சியைத் தரக் கூடியது மழை. குறிப்பாகப் பள்ளிக்காலங்களில் மழையில் புத்தகப்பை நனைந்து போய் அதைக் காயவைப்பது பழைய காகிதத்தில் கப்பல் செய்து விடுவது, மழை நேரத்தில் சுடச்சுட ஏதாவது சாப்பிடுவது, குடிப்பது என மறக்கமுடியாதவை. தீடிரென இயற்கை அன்னை சீற்றம் கொண்டு வெள்ளமாய் பெருக்கெடுத்து எல்லோர் வீடுகளையும் அழித்தது மறக்க முடியாதது. இவ்வாறாக என் மழைக்கால அனுபவம் இருந்தது.
MADHUVARSHINI IX–A
அடைமழையா? அடடே மழையா?
அடைமழையாக இருந்த காலம் சென்று அடடே! மழை பொழிகிறது என்ற நிலை உருவாகியுள்ளது. கடவுகளின் அழகிய படைப்புகளின் ஒன்றான மழையை ஒரு வருடத்தில் பல முறை கண்டனர் நம் முன்னோர். ஆனால் நாமோ மழை பெய்தால் அடடே! மழை பொழிகிறதே என்ற நிலைக்கு ஆளாகியுள்ளோம். ஆனால் இன்று மழை பொழிந்தால் ஓரேயடியாக மொத்த இடத்தையும் வெள்ளக்காடாகவும் மாறுகிறது [உதாரணத்திற்கு – வெள்ளம்] சில சமயம் நாம் அனைவரும் மழை பொழியாதா என்று நம்மைக் காக்க வைக்கின்றது. சில இடங்களில் மழை பெய்தாலே அதிசயம் என்ற நிலைக்கும் கொண்டுவருகிறது. இந்த மாய மழை மனிதனுக்கு அடை மழையாகப் பொழிந்து அவனது வாழ்வாதாரத்தை அழித்தும் என்றாவது ஒருநாள் பொழிந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தும் வள்ளல் தன்மை கொண்டது. இம்மாய மழையானது குழந்தைகளுக்கு அடைமழையாகப் பொழிந்து பள்ளி வேலை நாட்களைக் குறைத்து எங்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்குகிறது. ஆனாலும் இக்காலத்தில் நாம் பெரும் பாலும் அடடே மழையா? என்ற நிலையில் தான் நம் பூமியை வைத்துள்ளோம்.
வெ. சுவேதா IX–C