ஓட்டம்
காலை வேளையில்
கால்களுக்கும்
கடிகார முட்களுக்கும் – நடக்கும்
நீயா? நானா? போட்டியில்
காலதேவனே பலமுறை
வெல்கிறான் – ஏனிந்த
ஓட்டம்? சிந்தித்தேன்.
தாயின் கருவறை நோக்கி
தந்தையிடமிருந்து ஓடுகிறோம்.
பிள்ளைப்பருவத்தில்
பள்ளியை நோக்கி ஓடுகிறோம்.
பதின் பருவத்தில்
நண்பர்களை நோக்கி ஓடுகிறோம்.
குமரப்பருவத்தில்
அழகை நோக்கி ஓடுகிறோம்.
கற்றுத் தெளிந்திட
கல்லூரியை நோக்கி ஓடுகிறோம்.
வாழ்வில் வெற்றிபெற
வேலையை நோக்கி ஓடுகிறோம்.
வாழ்வில் முழுமைபெற
இல்லறத்தை நோக்கி ஓடுகிறோம்.
வாழ்க்கையை வெற்றி கொள்ள
அமைதியை நோக்கி ஓடுகிறோம்.
ஓடுவது ஒன்றையே
ஒழுக்கமாகக் கொண்டு
ஒருவரோடு ஒருவர்
முன்னும்பின்னும் முட்டியும் மோதியும்
கைகோர்த்தும் விலக்கியும்
கடமையாக ஓடுகிறோம்.
வளி ஓட்டம் நிற்கும் வரை
வாழ்க்கைக் சக்கரம் சுழல ஓடுகிறோம்.
உண்மை தெளிந்தேன்
ஓடும் நீரே மின்சாரத்தின் பிறப்பிடம்
ஓடுவதை இன்பமாகச் செய்து
மகிழ்ச்சி மின்சாரத்தை
மனிதரிடையே கடத்துவோம்.
ஓடுவோம் மகிழ்ச்சியோடு!
ஓடுவோம் விருப்பமோடு!
ஓடுவோம் வேட்கையோடு!
ந. பத்மப்பிரியா
தமிழாசிரியர்
என்.எஸ்.என். நினைவுப்பள்ளி

