பயணங்கள் எப்பொழுதும் நாம் நினைப்பதைப் போல் அமைவதில்லை. சில பயணங்கள் நமக்குப் பயணங்களாகத் தோன்றினாலும், பல பயணங்கள் நமக்கு ஒரு பயணமாக மட்டுமல்லாமல் பாடமாகவும் அமைகின்றன. பயணங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பல. மனிதாபிமானம், குழந்தையுடன் நிற்கும் தாய்க்குப் பேருந்தில் இடம் தருவது, பெரியவர்களின் சொற்களைக் கேட்பது போன்ற பலவற்றைப் பயணங்கள் மூலம் நாம் அறியலாம். ஒரு புது இடத்திற்குப் பயணம் செய்யும் பொழுது, ஒரு புது உலகத்தையே நாம் காணப் போவது போன்று நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த மகிழ்ச்சிக்காகவாவது நாம் ஒரு முறையேனும் பயணம் செய்ய வேண்டும். சில பயணங்கள் பலரின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையுமே மாற்றியுள்ளன. அமெரிக்கர்கள் ஐரோப்பாவிற்குச் சென்றதன் மூலம் தான் அவர்களுக்கு ‘உருளைக்கிழங்கு’ என்னும் காய் வகையே கிடைத்தது. வாஸ்கோடகாமா நம் இந்தியாவிற்கு வந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதன் மூலம் தான் பிரிட்டிஷார் நம் நாட்டிற்குள் நுழைந்து பல பொருட்களைக் கொள்ளையடியத்தனர் என்ற செய்தியையும் அறிந்தேன்.
க.ஸ்வேதா
எட்டாம் வகுப்பு ஈ பிரிவு
ஒன்றனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள நமக்கு அனுபவங்களே உதவுகின்றன. அத்தகைய சிறந்த அனுபவம் நமக்குப் பயணங்கள் மூலமாகவே கிடைக்கும். ஒரு சிறந்த அனுபவம் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் பல. அதுபோல, பல சிறந்த அனுபவங்களைத் தரும் ஒரு சிறந்த பயணம் கற்றுக் கொடுப்பவை எண்ணற்றவை. அதனை நாம் அனுபவிக்கும் அந்த நொடியில் உணரவில்லையென்றாலும், அவை நம் வாழ்வில் ஏதெனும் ஒரு சமயத்தில் நமக்கு உதவி செய்யும். ஓர் இடத்தில் அமர்ந்திருந்து நம்மால் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும் என்றால், பல இடங்களுக்கு பயணித்து நம்மால் இன்னும் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும். பயணம், இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் அடிப்படையாக இல்லா விட்டாலும் நம் வாழ்க்கையில் அடிமேல் அடி வைத்து முன்னேற அவை உதவுகின்றன. எனவே, பயணிக்கும் வாய்ப்புகளைத் தவற விடாமல், அப்பயணங்களில் இருந்து பல நன்மைகளைப் பெறலாம்.
க.ஸ்ரீ பூமிஜா
எட்டாம் வகுப்பு ஈ பிரிவு
நான் என்னுடைய ஒரு சுவாரசியமான பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். நவம்பர் மாதம் பறவைகளைப் பார்ப்பதற்கு உகந்த மாதம் என்று என்னுடைய குடும்பத்தினரோடு அங்குச் சென்றேன். அங்கிருந்தவை எவ்வளவு அழகான பறவைகள் தெரியுமா? வெள்ளை, சிவப்பு, மஞ்சள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு தொலைநோக்குக் கருவி மூலமாக அப்பறவைகளைப் பார்த்தோம். எங்களுடைய வழி காட்டுநர் அங்கு வரும் பறவையினங்கள் அவை கடந்து வரும் தொலைவு, அவற்றின் வாழ்நாள் காலம் என பல கூறினார். அவர் கூறிய ஒரு செய்தி வருத்தமளிப்பதாக இருந்தது. கடந்த ஆண்டு 1,20,000 பறவைகள் வந்தன. ஆனால், இந்த ஆண்டு மரங்கள் இல்லாத காரணத்தாலும் மழை இல்லாத காரணத்தாலும் 534 பறவைகள் மட்டும் தான் வந்துள்ளன என்றார். இப்பயணத்தினால் நான் கற்றுக்கொண்டது மரங்களை அழிக்காமல் இருந்தால் அழகான இயற்கை காட்சிகளைக் காண்பதுடன் மனமும் அமைதியாக இருக்கும்; எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் உயிரினம் அழிய நாம் காரணமாக இருக்கக் கூடாது என்றதொரு உயர்ந்த பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.
மு.ஸ்ரேயா
எட்டாம் வகுப்பு ஆ பிரிவு
நான் என் குடும்பத்துடன் ஐதராபாத் சென்றிருந்தேன். அங்கு நிறைய சுவாரசியமான தகவல் தருவனவற்றைக் கண்டேன். ஒரு ஆச்சரியமான செய்தி கோல்கொண்டா கோட்டையிலிருந்து சார்மினாருக்கு இராஜாக்கள் செல்வதற்கு இரகசியப் பாதையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அவ்வழி 80 கிலோமீட்டர் இருக்கும். அவ்வழியாகத்தான் மன்னர்களும் வீரர் படையும் இராணிகளும் சென்று எதிரிகளிடமிருந்து தப்பிப்பார்களாம். வீரர் படைக்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு 150கிலோ இரும்புப் பொருளை தூக்கிக் கொண்டு படிக்கட்டில் (கைப்பிடியில்லாமல்) ஏறிச் செல்ல வேண்டும். அக்காலத்து மக்கள் அவ்வளவு பலசாலியாக இருந்துள்ளனர் என்ற அச்செய்தி கேட்டு நான் வியந்தேன். இந்தப் பயணம் எனக்குப் பல வரலாற்று உண்மைகளைக் கூறியது.
பா. ஹரிணி
எட்டாம் வகுப்பு ஆ பிரிவு
பயணம் செல்வது எனக்குப் பிடித்தமான செயலாகும். பயணம் நம் வாழ்க்கை, மனம், மொழி என எல்லாவற்றிற்கும் ஒரு மாறுதலைத் தரும். நம் வாழ்க்கையின் திருப்பு முனையாகவும் இருக்கலாம். நாமக்கல்லுக்கு அருகே உள்ள கொல்லிமலை என்னும் மலைப்பிரதேசத்திற்குச் சுற்றுலாப் பயணியாக என் குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். எழுபது கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இம்மலையில் குரங்குகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. அங்கே தனியே நின்ற ஒரு குரங்கு, கூட்டமாக நின்று கொண்டிருந்த குரங்குகளையும் அதன் குட்டிகளையும், மற்ற சிறு குரங்குகளையும் பாதுகாத்தது. நான் வியந்து போனேன். அந்த ஐயறிவு கொண்ட சிறு விலங்குகளுக்கே பாசம், அன்பு, பாதுகாப்பு, விட்டுக் கொடுக்கும் மனம், அக்கறை முதலியவை இருக்கும்போது நம்மிடத்தில் அது குறைந்து வருவதனை எண்ணி வருந்தினேன். அதற்கு ஏன் நமக்கு ஆறறிவு? எனச் சிந்திக்கச் செய்தது இப்பயணம்.
மு.ஷாலினி
எட்டாம் வகுப்பு ஆ பிரிவு
பயணம் என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது நமக்குக் கிடைக்கும் ஒரு புதிய அனுபவம் ஆகும். அதேபோல் தான் நம் வாழ்க்கையும். நம் வாழ்க்கை குழந்தை என்னும் பருவத்தில் ஆரம்பித்து, அதிலிருந்து சிறிது சிறிதாக வளர்ந்து கடைசியில் வாலிப வயதை அடைந்து பிறகு ஒரு முழுமையாக வளர்ந்த பெரியவராக மாறுகிறோம். இந்த நீண்ட பயணத்தில் நாம் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறோம், நிறைய ஏற்றத் தாழ்வுகள், அவமானங்கள், மகிழ்ச்சியான நொடிகள் இவை அனைத்தையும் கடந்து வருகிறோம். சில நேரங்களில் பயணம் தடம் மாறும், பயணத்தைப் பாதியில் முடித்துக் கொள்ளலாமெனத் தோன்றும், அப்போதெல்லாம் நம், பயணத்தின் எதிர்த் திசையில் நொடியில் மறையும் மரங்கள், காட்சிகள் போன்று இடர்களைத் தவிர்த்து விட்டு இறைவன் தந்த இம்மமனிதப் பிறவியில் எப்பொழுதும் நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும், அவர்கள் நம்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அன்பையும் நினைத்துத் தொடந்து பயணித்தால் வாழ்வே நமக்கு என்றென்றும் வெற்றிப் பயணமாகத்தான் அமையும்.
இர.மீரா
எட்டாம் வகுப்பு ஆ பிரிவு
பயணம் என்பது மகிழ்ச்சியான ஒன்று. எனக்குப் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். , நாம் ஒவ்வொரு இடங்களுக்குச் செல்லும் பொழுதும் நாம் நிறைய புது இடங்களைக் காணலாம். நிறைய புதிய மக்கள் நண்பர்களைக் காணலாம். அவர்களோடு பழகலாம். அதன்மூலம் அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், நெறிமுறைகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம். நான் இதுவரை ஆந்திரபிரதேசம், கர்நாடகா, பெங்களூரூ, ஐதராபாத், கேரளா ஆகிய இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். பயணத்தை நான் விரும்புவதற்கு முக்கியமான காரணம் செல்லும்போது நிறைய அழகான காட்சிகள், விலங்குகள் மற்றும் பச்சைப்பசேல் என்று இருக்கின்ற வயல்களைக் காணலாம். இயற்கையைப் பார்த்தவாறே பயணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவினாஷ் இராமநாதன்
எட்டாம் வகுப்பு ‘இ’ பிரிவு
நான் கடந்த மார்ச் மாதம் சிக்கிம் என்ற மாநிலத்துக்குச் சென்றேன். சிக்கிம் மாநிலத்துக்கு காங்டாங் என்னும் நகரம் தான் தலைநகரமாகும். அங்கு நான் நிறைய புத்தர் கோவில்களுக்குச் சென்றேன். நம்சி என்னும் நகரத்தில் ஓர் உயிரியல் பூங்காவிற்குச் சென்றேன்.அங்கு பனிச்சிறுத்தை, தார் போன்ற பலவகை விலங்குகளைக் கண்டு மகிழ்ந்தேன். பிறகு இந்தியா – சீனா எல்லையைப் பார்த்தேன், அங்கு நிறைய இராணுவ வீரர்கள் இந்தியாவையும், சீனாவையும் சுற்றிப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு சுற்றியிருந்த பகுதிகளைக் கண்டு இன்புற்றேன். இப்பயணமானது, வியப்பையும், மகிழ்வையும் தந்தது..
ம. கவின் ஸ்ரீராம்
எட்டாம் வகுப்பு ‘ ஆ ‘ பிரிவு
பயணங்கள் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் நடுவில் நம்மை மூழ்கடிக்கும் இனிய மறக்க இயலாத தருணங்களைத் தர வல்லது.நம் ஒவ்வொரு பயணமும் நாம் நினைத்துப் பயணிப்பது போல் நிகழாது.நம் வாழ்க்கையே ஒரு சுவாரசியமான பயணம்.நம் யாருக்கும் தெரியாது நமக்கு
எந்த நொடியில் என்ன நடக்கும் என்று. ஆனால் நம்மால் செய்ய இயலும் ஒரே செயல் அந்த பயணங்களைக் குறித்து வைத்துக் கொள்வதுதான். நாம் எப்பொழுதும் எதற்கும் தயாராக இருந்தால், நம்மால் 100% வெற்றியை வாழ்வின் கடினமான பயணத்தை எதிர் கொள்ளலாம். நான் இறுதியாக அனைவருக்கும் கூறுவது என்னவென்றால் பயணத்தின் போது சில நேரத்தில் கழுகு போன்று கூர்மையான பார்வை கொண்டு நம்மைச் சுற்றி நடப்பனவற்றைக் கவனிக்க வேண்டும். குழந்தை போல் மகிழ்ந்தும் வீரனைப் போல் போராடியும் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற வேண்டும்.
க. ஜெய ஆதித்யன்
எட்டாம் வகுப்பு ‘ஈ பிரிவு
பயணம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு செயல் தான். நாம் வீட்டிலிருந்து பள்ளிக்குப் பயணம் செய்கிறோம். நமது பெற்றோர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் பயணம் செய்கின்றனர். இவையெல்லாம் தினமும் நடப்பவை தான். சில நேரத்தில் நாம் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்போம். பயணங்கள் நமக்குள் ஒருவிதமான மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். உதாரணமாக தொடர்வண்டிப் பயணம் அதில் பயணிக்கும் போது வேகமாக நம்மீது வீசிடும் காற்று புத்துணர்ச்சியைத் தரும். இவ்வாறு விடா முயற்சியோடு பயணித்தால் தான் நமது இலக்கை நம்மால் அடைய முடியும். அனைவரும் பயணம் செய்யுங்கள் இலக்கை அடையுங்கள்.
சு. மதுமிதா
எட்டாம் வகுப்பு ‘ஈ’ பிரிவு