க்லாஷ், க்லேன் மற்றும் நீலத்திமிங்கலம் ஆகியன மிகவும் ஆபத்தான இணைய விளையாட்டுகள் ஆகும். நீலத்திமிங்கலம் மூலம் பல பேர் இறந்திருக்கின்றனர். இந்த விளையாட்டை இணையத்தில் மட்டுமே விளையாட இயலும். நீலத்திமிங்கலம் மட்டுமல்ல அனைத்து இணைய விளையாட்டுகளும் ஆபத்தானவை. அதிக நேரம் விளையாடினால் அது நம்முடைய கண்களையும், மூளையையும் பாதிக்கும். எந்த இணைய விளையாட்டுகளாக இருந்தாலும் சரி; அதைச் சிறிது நேரம் விளையாடி விட்டு நம் வேலையைப் பார்க்க வேண்டும். இது போன்ற இணைய விளையாட்டுகள் கொடூரமான இறப்பிற்கு அழைத்துச் செல்லும். இச்சமூகத்தில் சில தாய், தந்தையர்களுக்குத் தங்களுடைய பிள்ளைகள் பற்றி கவலையே இல்லை. பிள்ளைகள் மனதில் என்ன இருக்கிறது என்று பெற்றவர்கள் கண்டு கொள்வதில்லை. அதனால் பெற்றவர்கள் தங்களது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் நல்ல கவனம் செலுத்திக் கலந்துரையாடினால் இச்சமூகம் வளமை பெறும்.
கா. சாய் சரண்
ஒன்பதாம் வகுப்பு ‘இ’பிரிவு
‘இணையதளம்’ என்னும் வலைதளம் விஞ்ஞானிகள் நாம் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடித்தனர். ஆனால் இப்போது நாம் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறோம். குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியோர்களும் இப்போது இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். சமயத்தில் இப்போது ப்ளுவேல் இணைய விளையாட்டை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த நீலத்திமிங்கலம் விளையாட்டால் சமீபத்தில் நிறைய விபத்துகள் நடைபெற்றுள்ளன. நூற்றிற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். இந்த இணைய விளையாட்டு விளையாடுவோரை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்துகின்றது. இந்த இணைய விளையாட்டு இளைஞர்கள், வேலை செய்வோர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரையும் ஈர்க்கிறது. அதாவது ஒரு நாட்டையே இந்த விளையாட்டு பாதிக்கின்றது. இப்போது இந்த விளையாட்டைத் தடை செய்து விட்டார்கள். ஆனால், இறந்தவர்களின் பெற்றோரின் கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. அதற்காக இணைய தளத்தில் விளையாட்டுகளே விளையாடக் கூடாது என்பது எனது கருத்தல்ல. ஆபத்தான விளையாட்டுகளால் ஈர்க்கப்படாதீர்கள் என்பது தான் என்னுடைய கருத்து. ஏனெனில் நம் நாட்டின் வளர்ச்சியே நம்மைப் போல் இளைஞர்களிடம் தான் உள்ளது….. எனவே சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
சு. சாய் ஹரிணி
ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவு
நம் நாட்டில் இன்று அனைவரும் இணையத் தளத்தில் பொருள்களை வாங்கியும், விற்கவும் செய்கின்றனர்.அதே இணையத் தளத்தில் குழந்தைகள் விளையாடுகின்றனர். சமீப காலமாக “நீலத் திமிங்கலம்” என்னும் இணையத்தள விளையாட்டால் குழந்தைகள் பலர் இறந்துள்ளனர்.உயிரைப் பறிக்கும் இணையத்தள விளையாட்டுகள் பற்றி விழிப்புணர்வு இப்போதுதான் எழுந்துள்ளது. என்றும் வாழ்விக்கும் தமிழ் வழி வந்த பாரதியார் அன்றே,
“ஒடி விளையாடு பாப்பா
நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா”
என்ற பாடல் மூலம் விளையாட்டுடன் பிற உயிர்களை நேசித்து நாமும் வாழும் முறைமை பற்றிப் பாடியுள்ளார். இனியாவது நாம்
அல்லவை நீக்கி
நல்லவை கற்போம்;
கற்றுக் கொடுப்போம்.
கௌதம் கார்த்திக்.சு
ஒன்பதாம் வகுப்பு ‘அ’ பிரிவு
காலம் காலமாக பாண்டி, கபடி, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை மறந்து, இன்று புதிதாக வந்துள்ள இணைய விளையாட்டுகளை மாணவ மாணவியர் விளையாடி வருகின்றனர். இந்த இணையத்தள விளையாட்டுகளால் பல்வேறு சிக்கல்கள் வரும். இன்று பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களிலிருந்து வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் வரை இந்த இணையத்தள விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் நமக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன.நம் மூளையையும் உடம்பையும் பாதிக்கும். இதனால் படிக்கவோ மற்ற வேலைகளைச் செய்யவோ இயலாது. இதற்குக் காரணம் இந்த விளையாட்டிற்கு அடிமைப்படுவதுதான். இந்த விளையாட்டினை விளையாடுவதனால், நாம் சிக்கலில் மாட்டிக்கொண்டு நம் பெற்றோரை துன்பப்படுத்தும் நிலைக்கும் ஆளாகிறோம். இதனால் நம் படிப்பும் எதிர்காலமும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நம் உயிரைப் பலி கொடுக்கவும் மற்றும் தன்னிலை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இந்த இணைய விளையாட்டுகள் விளையாடுவதனால் நம் கண்கள் மிகவும் பாதிக்கப்படும்.இதனைத் தடுக்க, நாம் இவை போன்ற விளையாட்டுகளை விளையாடுவதை விட்டு விடுவது நல்லது. வாழும் வயதிலே பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட வேண்டுமா? சிந்தித்துச் செயல்படுங்கள்.
த.மஞ்சுபிரியா
ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’பிரிவு
நம் அன்றாட வாழ்வில் இணையத்தளம் பெரும்பங்கு வகிக்கிறது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று அனைவரும் பொழுதுபோக்காக இணையத்தள விளையாட்டுகளையே நம்பி இருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக இணைய விளையாட்டுகள் சமுதாயத்தில் பெரிய ஆபத்தினை உண்டாக்கியுள்ளன. இவ்விளையாட்டுகளால் பலரின் உடல், மனம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் அனைவரும் இவ்விளையாட்டுகளை விளையாடுவதால் சிறிய வயதிலே மூக்குக் கண்ணாடிகள் பயன்படுத்துகிறார்கள், எந்நேரமும் இணையம் முன் உட்கார்ந்து விளையாடுவதால் மாணவர்களுக்கு அவர்களது பாடத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. ஆதலால் ஆபத்தான இணைய விளையாட்டுகளைத் தடை செய்து, உயிர்களைப் பலிவாங்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவோம்! வருங்காலத் தலைவர்களான நாம் அனைவரும் ஆபத்தான இணைய விளையாட்டுகளை விளையாட மாட்டோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம். பாரதி கண்ட இனிய, இளைய பாரதத்தைப் படைத்திடுவோம்.
ஐ. திரவீணா
ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’பிரிவு
இணையம் என்பது நம் அறிவை வளர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர நம்மையே அழிக்கப் பயன்படுத்தக் கூடாது. இந்தக் காலத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதில்லை. அவர்கள் வீட்டிலேயே இணையத்தில் சில ஆபத்தான விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு வருகின்றனர். இந்த ஆபத்தான விளையாட்டுகள் குழந்தைகளுக்கு மனநோயை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் தங்களது படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த இணையத்தள விளையாட்டுகளுள் ஒன்று “நீலத்திமிங்கலம்”. இந்த விளையாட்டால் பலரும் தமது உயிர்களை இழந்து உள்ளனர். பெற்றோர்களும் தமது குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் கலந்துரையாடலும் இல்லாத இக்குழந்தைகள் பெரிதும் கவலைக்குள்ளாகி உயிரை இழக்கின்றனர். எனவே அழிவை உண்டாக்கும் இவ்விளையாட்டினை அறவே ஒதுக்க வேண்டும்.
சி.ஆனி பிரிஸ்செல்லா
ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவு
ஆபத்தான இணைய விளையாட்டுகளால் சின்ன சின்ன சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தாம் துன்பத்திற்கு ஆளாகிறோம் என்பதை அவர்கள் அறியாமல் விளையாட்டாகவே விளையாடுகிறார்கள். அவ்விளையாட்டுகள் குழந்தைகளைக் கவரும்படியாக உள்ளது. அதனால் அதில் ஈடுபாடு கொண்டு விளையாடுகின்றனர். அக்காலத்தில் விளையாட்டு என்றாலே ஒரு நொண்டி, கபடி, சிறுதேர் இழுத்தல், பாண்டி, கில்லி மற்றும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்றவை விளையாடுவர்.ஆனால் இக்காலத்தில் கணினி, மடிக்கணினி, கைபேசி ஆகிய அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் இணையத்தில் விளையாடுவதை முக்கியமான ஒன்றாக வைத்துக் கொண்டுள்ளனர். இணையத்தில் விளையாடுவது பெரும் ஆபத்தினை உண்டாக்குவதுடன் கண்வலி, மனஅழுத்தம், மூளைக் கோளாறு போன்ற புதுப்புது நோய்களை உண்டாக்குகின்றது. சில விளையாட்டுகள் உயிரை எடுக்க முயல்கின்றன அவற்றுள் ஒன்று தான் “நீலத்திமிங்கலம்” என்னும் விளையாட்டாகும், பாதிப்பை ஏற்படுத்தும் இவ்விளையாட்டை விட்டு விட்டு நமது மூளைக்குச் சுறுசுறுப்பும் அமைதியும் வலிமையும் தரும் அக்கால விளையாட்டுகள் விளையாடி நோய்களை வரவழைக்காமல் பாரதி கூறியபடி
“ஒடி விளையாடு பாப்பா
நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா”
என்பதைப் பின்பற்றி வாழ்வோம்
க.யுவஸ்ரீ
ஒன்பதாம் வகுப்பு’அ’ பிரிவு
இணையத்தால் பல நன்மைகள் உள்ளன.தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.இந்த இணையத்தால் சில தீமைகளும் உண்டாகின்றன.அவை ஆபத்தான இணைய விளையாட்டுகள் ஆகும்.சிறுவர்கள் முன்பெல்லாம் மைதானத்தில் சென்று கபடி, கில்லி, கால்பந்து, மட்டைப்பந்து எனப் பல விளையாட்டுகள் விளையாடுவர்.ஆனால், இப்பொழுது இணையத்தளம் மூலமாக கைப்பேசியில் ஆபத்தினை விளைவிக்கும் இத்தகைய விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். இதனால் கண்கள் கெட்டுப் போவதுடன் பல நோய்களும் உருவாகின்றன. சமீபத்தில் நீலத்திமிங்கலம் என்னும் விளையாட்டால் பல மக்கள் தங்கள் உயிரையே பறிகொடுத்துள்ளனர். அவ்விளையாட்டை ஆரம்பிக்கும் முன் நம் அன்னை தந்தையரை எண்ணிப் பார்த்து அவர்கள் படும் துன்பத்தை நினைத்துப் பார்த்தாலே அச்செயலில் ஈடுபட எண்ணம் எழாது.
ஆ. சாதனா
ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு