உலகில் வாகனங்களே இல்லா விட்டால் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாகனங்கள் இல்லாத உலகம் மிகவும் நன்றாக இருக்கும். காற்று மாசுபடுதலே இவ்வுலகில் இப்பொழுது கடும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இப்பிரச்சனையைச் சரி செய்வதற்கு வாகனங்களை அகற்றல் தான் மிகச் சரியான வழியாக இருக்கும். வாகனங்களை அகற்றுவதனால் பல நோய்கள் மனிதர்களுக்கு வருவதனைத் தடுக்கலாம். அதிலிருந்து வரும் புகையினால் மனிதர்கள் பல நோய்களுக்கும் ஆளாகின்றனர். வாகனங்களே இல்லை என்றால் மனிதர்கள் நலமாகவும் திடமாகவும் இருப்பர். மேலும் வாகனங்களுக்குப் பதிலாக மிதிவண்டியைப் பயன்படுத்தினால் உடற் பயிற்சியாகவும் அமையும்.
“வாகனங்களே இல்லாமல் இவ்வுலகத்தைக் காப்போம்”
நா. கீர்த்தனா
எட்டாம் வகுப்பு – இ பிரிவு
வாகனங்களே இல்லாத உலகம், இது ஒரு அழகான கற்பனை உலகம்
வாகனங்களே இல்லை என்றால் மனிதன் ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்ல நடக்க வேண்டும் அல்லது ஓட வேண்டும். இவ்வாறு இருப்பதால் மனிதன் ஒரே இடத்தில் தங்கி தன் வேலைகளைச் செய்வான்.
நம் வாழ்க்கை இயந்திரமயமாக மாறாமல் அமைதியாக இருக்கும். அனைவரும் நம்மைச் சுற்றி உள்ள இயற்கையின் அழகைக் கண்டு மகிழ்வர். வேலை, வேலை என்று இன்று அனைவரும் பல இடங்களுக்குச் செல்கின்றனர். ஆனால் அங்குச் சென்றால் அந்த இடத்தைப் பார்ப்பதோ இரசிப்பதோ கிடையாது.
நம் உலகம் நமக்கு கடவுளால் பரிசாகக் கொடுக்கப்பட்டது. அதில் வாழும் ஒவ்வொரு நொடியும் அழகானது. அந்த வாழ்க்கையை நாம் இரசிக்க வேண்டுமென்றால் நாம் சிறிது மாற வேண்டும்.
உலகத்தில் வாகனங்களே இல்லை என்றால் மாசு குறையும், மனிதனின் வாழ்வும் மிக இனிமையாக மாறும். எனவே, வாகனங்களே இல்லாத உலகம் – ஒரு அழகான கற்பனை உலகம்.
பா. ஸ்ரேயா
ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு
வாகனங்களே இல்லாத உலகத்தில் சில நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. முதலில் நாம் நன்மைகளைப் பற்றி அறிவோம். தூய்மையான காற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் மழை அதிகமான அளவில் பொழியும். பசுமையான மரம், செடி, கொடிகள் வளரும். வாகனம் இல்லாமல் நாம் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு நடந்து செல்லும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாகனங்கள் இல்லை என்றால் போக்குவரத்துச் செலவு இருக்காது, நாம் ஊரில் மாசு மற்றும் இரைச்சல் இல்லாமல் அமைதியாக இருக்க முடியும். இப்போது நாம் அதன் தீமைகளைப் பற்றிக் காண்போம். வாகனங்கள் இல்லாத உலகில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான காய்கறி, பழம் போன்ற உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். வியாபரிகள் தங்கள் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதில் கடினம் ஏற்படும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் செல்வதில் சிரமம் ஏற்படும். முதியோர் மற்றும் நோயாளிகள் மருத்துவமனை செல்வதில் கடினம் ஏற்படும். எனவே வாகனங்கள் இல்லாத உலகில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. ஆனால், அனைவரும் நோய் தரும் புகையின்றி வாழ வாகனங்கள் இல்லாமல் வாழப் பழகுவோம்.
க. நிஷாந்தி
ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு
இன்று வாகனம் இல்லாத உலகைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. வாகனம் நம் அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்றாகும். இதனால் பல நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன. நம் முன்னோர்கள் வாகனம் இல்லாது நடந்தே தான் வாழ்ந்தார்கள். அவர்கள் மிதி வண்டி இல்லாது நடந்தே பயணம் செய்தனர். மேலும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத காற்றைச் சுவாசித்தனர். அதனால் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் மனிதர்களுக்குப் பல வித நோய்கள் ஏற்படுவதற்கு மூல காரணமே சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதே. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதற்கு முதற் காரணம் வாகனப் பெருக்கமும் அதிலிருந்து வெளியேறும் புகையும் இவை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற பறவைகள், விலங்குகள் அழிவதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, வாகனங்கள் இல்லா உலகில் வாழப் பழகுவோம்.
கா. விஜயலட்சுமி
ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு
உலகின் மாசுகளின் தொல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளுள் ஒன்றாக அமைந்து விட்டது. நம் சுற்றுப்புறச் சூழ்நிலை ஒவ்வொரு நாளும் பாதிப்படைகின்றது. இயற்கையோடு வாழ்ந்த மனிதன் அந்த இயற்கையை வேருடன் அழிக்க முற்படுகிறான். நிலம், நீர் வான் வெளிமண்டலம் ஆகியவற்றுடன் சுவாசிக்கும் காற்றும் காற்று மண்டலமும் மாசடைந்து விட்டது. இதற்கு வாகனங்களிலிருந்து வரும் புகையும் முக்கியக் காரணம் ஆகும். இதனை நம்மால் தடுக்க முடியும், ஆனால் அதற்காக நாம் சில முயற்சிகள் எடுக்க வேண்டும். எவ்வாறெனில் வாகனங்களின் புகையைக் கட்டுப்படுத்தும் சோதனைக்குட்படுத்தி இயக்க வேண்டும். மேலும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாகனங்கள் இல்லாமல் பயணிக்கப் பழக வேண்டும்.
ஸ்ரீ. சக்தி
ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு
இயந்திர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒரு நாளாவது மகிழ்ச்சியைப் பெருக்கும் விதத்தில் இருக்கும் வாகனங்கள் இல்லாத உலகத்தைக் நினைத்து கற்பனையில் சுகத்தைக் காணலாம்.
*வாகனங்கள் இல்லையெனில் எங்கும் அமைதி.
*பறவைகளின் இன்னொலியை இரசிக்கும் மனம்.
*தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் நம் நுரையீரல்.
*அவசரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் தன்னை மட்டுமே கவனிக்கும் நம் நினைவு
அனைவரையும் மதிக்கும் பண்பு.
*தெருக்களில் குழந்தைகளின் ஆர்ப்பரிக்கும் ஆனந்த விளையாட்டு
*எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதாரம் உயர்த்தும் வீட்டுச் சிக்கனம்
விஷ்வதாரினி
ஆறாம் வகுப்பு ‘ஈ’ பிரிவு